அடுத்தடுத்து பெண் சீடர்களின் பாலியல் வன்கொடுமை தொடர்பான புகாரை அடுத்து நிகழ்கால புத்தர் எனக் கூறி வலம் வந்த நேபாளத்தைச் சேர்ந்த ராம் பகதூர் போம்ஜன் என்பவர் போலீசார் கைது செய்துள்ளனர்.
நேபாளத்தில் ஆசிரமம் நடத்தி வந்த ராம் பகதூர் போம்ஜன், அவரது சீடர்களால் ‘புத்த பாய்’ என்று அழைக்கப்படுகிறார். இவரது ஆசிரமத்தில் பல பெண்கள் சீடர்களாகவும் சேவை செய்து வருகின்றனர். இதற்கிடையில், சீடர்கள் புத்த பாய் என்று அழைக்கப்படும் ராம் பகதூர் போம்ஜன் மீது சில பெண் சீடர்களும் பக்தர்களும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும், ஆசிரமத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரும் புத்த பாய் மீது எழுப்பப்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியது.
2010ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவரத் தொடங்கியதை அடுத்து 10க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். அவர்களுக்குப் பிறகு 18 வயது கன்னியாஸ்திரி ஒருவரும் பாலியல் புகார் அளித்தார். இந்த நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் அவரைத் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், ஆசிரமத்தில் இருந்து 2 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 4 பேர் திடீரென மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ராம் பகதூர் போம்ஜன் காத்மாண்டு புறநகர் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர், ஆனால் ராம் பகதூர் போம்ஜன் வீட்டின் ஜன்னலில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றார். எனினும், அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து கட்டு கட்டான பணம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.