மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று வங்கி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், தற்காலிகமாக பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலைநாளாக இருக்க வேண்டும். அயல்பணி மூலம் வெளியாட்களை வங்கிகளில் பணி நியமனம் செய்யக் கூடாது…
வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது பொதுமக்கள் சிலர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களை பாதுகாக்க போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். ஊழியர் நல நிதிக்கு வருமானவரி பிடித்தம் செய்யக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் 48 மணி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
அதேபோல், மார்ச் 3ஆம் தேதி டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இந்தப் போராட்டத்தில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட 9 சங்கங்கள் பங்கேற்கின்றன” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. எனவே, வாடிக்கையாளர்கள் வங்கிகளில் ஏதேனும் பணி இருந்தால், முன்கூட்டியே முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! தேர்வு கிடையாது..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?