எஸ்.பி.ஐ. வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எஸ்.பி.ஐ. வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து நடக்கும் சைபர் மோசடி சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சமீப காலமாக வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு பரிசு அல்லது Reward Points கிடைத்திருப்பதாக வரும் குறுஞ்செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று எஸ்.பி.ஐ. எச்சரித்திருந்தது. எஸ்பிஐ ரிவார்டுகளைப் பெறுவதற்கு APK கோப்பைப் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யும்படி மெசேஜ் வந்திருந்தால், அதை டவுன்லோட் செய்ய வேண்டாம் என்றும் அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் எஸ்.பி.ஐ. எச்சரித்திருந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு எச்சரிக்கையை தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ. வெளியிட்டுள்ளது. அதாவது, எஸ்.பி.ஐ. வங்கி பெயரில் வைரலாகி வரும் Deep Fake வீடியோவில் கூறப்படும் முதலீடுகளை நம்பி, அவற்றில் முதலீடு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், SBI ஒருபோதும் அத்தகைய வீடியோக்களை பகிர்ந்து கொள்ளாது என்றும், ஏ.ஐ. மூலம் அந்த வீடியோ போலியாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் எஸ்.பி.ஐ. வங்கி தெரிவித்துள்ளது.