ஆபாச படம், வீடியோவை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக சுமார் 13,000 பேரை சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பெண்கள், சிறுமிகள், பள்ளி – கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமூக ஊடகங்கள் மூலம் இதுபோன்ற நிகழ்வுகள் அவ்வப்போது வெளிச்சத்திற்கு வந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
இதற்கிடையே, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்வோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் சட்டம் ஜனவரி 25ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதுதொடர்பாக சட்டமன்ற கூட்டத்தொடரில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் ஜாமீனில் வெளிவராத வகையிலும், 14 ஆண்டுகளுக்கு கடுங்காவல் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதேபோல், 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் தான், பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், தற்போது சைபர் கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது, ஆபாச படம், வீடியோவை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக சுமார் 13,000 பேரை சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும், வியாபார நோக்கில் ஆபாச படம், வீடியோவை பதிவிறக்கம் செய்தால், 10 ஆண்டுகள் வரை சிறை விதிக்கும் வகையில் கைது செய்யப்படுவர் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.