மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரியும் கடுமையாக பாதிப்புக்குள்ளானது. புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் கரையை கடந்ததால், அங்கு கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும், குடியிருப்புகள் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தான், மழை வெள்ள பாதிப்புகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.
அதன்படி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், கனமழைக்கு 4 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். அதேபோல் கனமழையால் ஆடு, மாடுகளை இழந்தவர்களுக்கு ஒரு ஆடுக்கு ரூ.20,000, ஒரு மாடுக்கு ரூ.40,000, படகு சேதமடைந்திருந்தால், ஒரு படகுக்கு ரூ.10,000 வழங்கப்படும். வீடுகள் முழுமையாக சேதமடைந்திருந்தால், ரூ.20,000, விவசாய நிலங்கள் சேதமடைந்தால் ஹெக்டேருக்கு ரூ.30,000 வழங்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.