மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிந்த சுற்றுலா ரயில் பெட்டி, கடந்த சனிக்கிழமை அன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். சட்டவிரோதமாக ரயிலில் கொண்டு வரப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில் பெட்டியில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து குறித்து தடயவியல் துறையினர் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அப்போது அங்கு ஓர் இரும்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. அதில் கட்டுக்கட்டாக 500, 200 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் கிடந்தன. மதுரை ரயில் பெட்டி விபத்தில் மீட்புப் பணிகள் முடிவடைந்து விட்டதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை 5 பேரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். இந்த 5 பேரும் சுற்றுலா நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். அதில் இருவர் சமையலர்கள். இவர்கள் லக்னோவில் இருந்து வரும்போதே இரண்டு சிலிண்டர்களை கொண்டு வந்துள்ளனர். அதேபோல் 15 அடுப்புகள், நிலக்கரி, மண்ணெண்ணெய் ஆகியவற்றையும் அவர்கள் எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கன்னியாகுமரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அங்கு சட்டவிரோதமாக சிலிண்டர் ஒன்றை வாங்கியிருக்கிறார்கள். இந்த சிலிண்டரில் தான் கசிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
கள்ளச்சந்தையில் வாங்கப்பட்ட சிலிண்டரை வைத்து சமைக்கும்போது கசிவு ஏற்பட்டதன் காரணமாக தான் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரியில் அந்த சிலிண்டரை யாரிடம் வாங்கினார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்த விசாரணையை தீவிரமாக நடைபெற்று வருகிறது.