தாஜ்மஹாலை பார்வையிட வந்த செக் குடியரசை சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இவை சுற்றுலாத் துறையின் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன. இந்த நிலையில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த 28 வயதான இளம் பெண் தாஜ்மஹாலை பார்வையிட சென்ற போது, ஒரு நபர் உடல் பாகங்களை அத்தூமீறி தொட்டு, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்தச் சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தங்கியிருந்த ஹோம்ஸ்டே மதிப்பாளரிடம் விவரங்களை பகிர்ந்தார். அதனையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் உடனடியாக விசாரணை தொடங்கினர். அந்த பெண் போலீசில் புகார் அளித்ததை அடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆக்ராவை சேர்ந்த கரண் ரத்தோர் என்பரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து துணை கமிஷனர் சையத் ஆரீப் அஹ்மத் கூறுகையில், “செக் குடியரசை சேர்ந்த 28 வயதுபெண் ஒருவர், கடந்த இரு தினங்களுக்கு முன் இந்தியா வந்துள்ளார். அவர், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட செல்லும் போது, மதியம் 1 மணி அளவில் ஷம்ஷான் காட் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் தன்னை தகாத முறையில் தொட்டு துன்புறுத்தினார் என்று புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், சி.சி.டி.வி கேமரா பதிவில் ஆய்வில் ஆக்ராவை சேர்ந்த கரண் ரத்தோர் என்பவரை கண்டறிந்தோம். எங்களது முழுமையான விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் கரண் தான் என்று உறுதியான நிலையில் அவரை கைது செய்துள்ளோம்” எனக் கூறினார். இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் சுற்றுலாத் துறையின் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன.