தென்காசியில் கணவனை கொலை செய்துவிட்டு, நோயால் இறந்ததாக நாடகமாடிய மனைவியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி மரியா ஆரோக்கிய செல்வி (30). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இந்நிலையில், முத்துக்குமார் மஞ்சள் காமாலை காரணமாக திடீரென மயக்கம் அடைந்து விட்டார் என்று கூறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முத்துக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, முத்துக்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில், முத்துக்குமாரின் கழுத்து எலும்பு நெரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், முத்துக்குமார் மஞ்சள் காமாலையால் இறக்கவில்லை என்பதும், அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதற்கிடையே, நொச்சிகுளம் கிராம நிர்வாக அலுவலரை நேரில் சந்தித்த முத்துக்குமாரின் மனைவி மரியா ஆரோக்கிய செல்வி, தனது கணவர் மஞ்சள் காமாலையால் இறக்கவில்லை என்றும், தான் கொலை செய்ததாகவும் கூறி அதிர்ச்சி அளித்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரியவரவே, மரியா ஆரோக்கிய செல்வியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், எனது கணவர் வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு தொல்லை கொடுத்து வந்தார்.
அவரது கொடுமையை தாங்க முடியாமல், அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது கழுத்தை நெரித்தேன். இதில் அவர் மயக்கமடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் மஞ்சள் காமாலையால் எனது கணவர் மயங்கிவிட்டார் எனக் கூறி, அவர்களை நம்ப வைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, மரியா ஆரோக்கிய செல்வியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.