அனைத்து வகை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் 2ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வில் தமிழ் தேர்வு கட்டாயம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தாய் மொழியான தமிழ் மொழியினை மாணவர்கள் அனைவரும் கற்க வேண்டும் எனவும், தாய் மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு மாணவர்களை ஊக்குவித்து வருகிறது. ஆனால், சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே, அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில், ”சென்னை அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தமிழ் பாடத்திற்கான தேர்வுகளை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் 2ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வில் தமிழ் தேர்வு கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும் அதற்காக தமிழ் பாடத்திட்டங்களை சரிவர பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்து முறைப்படுத்தி தமிழ் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என்று வெளியான தகவலை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.