தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் கணபதி காலனி பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர், தனது குடும்ப செலவிற்காக Navi, Early Salary, Money View, Smart Coin போன்ற ஆன்லைன் செயலி மூலமாக 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய நிலையில், அதை சரிவர கட்டாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு நீண்ட நேரமாக தனது மொபைலை பார்த்துக் கொண்டே இருந்த வினோத்குமார், திடீரென வீட்டில் இருந்த தனது அம்மாவிடம் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் வாங்கி வாருங்கள் என்று கடைக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர், குழந்தைகளிடம் தான் தூங்க செல்வதாக கூறிவிட்டு படுக்கையறைக்கு சென்றுள்ளார்.
கடைக்கு சென்று திரும்பி வந்த வினோத்குமாரின் தாயார் தமிழ்ச்செல்வி, வினோத்குமாரை இரவு உணவு அருந்துவதற்காக கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து படுக்கையறையின் கதவை உடைத்து பார்த்தார். அப்போது புடவையால் மின்விசிறியில் வினோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், வினோத்தின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.