தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம், அன்னை தெரசா பகுதியைச் சேர்ந்தவர் அற்புதராஜ். பேன்சி கடை ஒன்று நடத்தி வரும் இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், தங்கதுரை என்ற மகனும் உள்ளனர். தங்கதுரை தனது மனைவி அஸ்வினி மற்றும் 5 வயது மகளுடன் சென்னையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவர் தனது மனைவி மற்றும் மகளை முத்தையாபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் விட்டுவிட்டு சென்னைக்கு வேலைக்கு சென்று விட்டார். சம்பவத்தன்று மாலையில், வழக்கம் போல் அற்புதராஜ் தனது பேன்சி கடைக்கு சென்ற நிலையில், மாமியார் மற்றும் மருமகள் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, பர்தா அணிந்த பெண் ஒருவர் வீட்டில் புகுந்து மாமியார், மருமகளை கட்டிப்போட்டு அவர்கள் இருவரும் அணிந்திருந்த நகைகள் உட்பட 62 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அஸ்வினி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அஸ்வினி தனது அக்காவை பர்தா அணிய வைத்து திருட்டில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது.
மேலும், சென்னையில் இருந்த போது, அஸ்வினி தனது நகையை ஆன்லைன் டிரேடிங் கம்பெனியில் அடமானம் வைத்து டிரேடிங் செய்துள்ளார். ஆனால் அவை லாஸில் முடிந்துள்ளது. இது பற்றி அவரது கணவருக்கு தெரியாத நிலையில், நகை எங்கே என கணவர் கேட்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தட்டிக் கழித்து வந்துள்ளார். இந்த நிலையில் நகையை மீட்க அவரிடம் பணம் இல்லாததால், மாமியாரின் நகையையே மருமகள் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதயில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.