Cancer centers: புற்றுநோயாளிகள் சிறப்பு சிகிச்சை பெறும் வகையில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் பகல்நேர புற்றுநோய் மையங்கள் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கடந்த 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 8-வது பட்ஜெட் இதுவாகும். வேறு எந்தவொரு நிதியமைச்சரும் இந்த சாதனையை நிகழ்த்தியது இல்லை. மத்தியில் பாஜக 3-வது முறையாக ஆட்சியமைத்தப் பின் தாக்கல் செய்த இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புற்றுநோய்க்கு எளிதாக சிகிச்சை அளிக்கும் வகையில், அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் பகல்நேர புற்றுநோய் மையங்கள் திறக்கப்படும் என்று அறிவித்தார். மேலும், 2025-26 நிதியாண்டில் 200 மையங்கள் நிறுவப்படும். இது கிராமப்புற நோயாளிகளுக்கு ஆரம்ப பரிசோதனைக்கு உதவும்.
இந்த மையத்தைத் திறப்பதன் நோக்கம், நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு புற்றுநோய் சிகிச்சை மற்றும் உதவிகளை வழங்குவதாகும். அதனால் சுகாதார சேவைகளில் ஒரு முக்கியமான குறைபாட்டை சமாளிக்க முடியும். இந்தியாவில் சமீபகாலமாக புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், நிதியமைச்சரின் இந்த அறிவிப்பு நோயாளிகளுக்கு பேருதவியாக இருக்கும்.
புற்றுநோய் நோயாளிகள் மட்டுமல்லாது குடும்ப உறுப்பினர்களையும் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கிறது. ஆனால் மருத்துவமனைகளில் புற்றுநோய் தினப்பராமரிப்பு பிரிவுகளை தொடங்குவதன் மூலம் அரசு, நோயாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு உளவியல் மற்றும் நடைமுறை உதவி கிடைக்கும். தினப்பராமரிப்பு மையம் தொடங்குவதன் மூலம் நோயாளிகள் சிறந்த சிகிச்சை வசதிகளை பெற முடியும்.
தினப்பராமரிப்பு என்றால் என்ன? புற்றுநோய் தினப்பராமரிப்பு மையத்தில் நவீன மருத்துவ உபகரணங்கள் இருக்கும், அதில் நோயாளிகளுக்கு கீமோதெரபி மற்றும் தேவையான மருந்துகள் வழங்கப்படும். புற்றுநோய் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் புற்றுநோயை சமாளிக்கவும் இந்த தினப்பராமரிப்பு மையம் உதவும். இது தவிர, நோயாளிகள் மற்றும் குடும்பத்தினருக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் பிற உதவிகளையும் இது வழங்கும்.