சென்னை பகுதியை சுற்றி ஓடும் ஆறாக கூவம் இருந்து வருகிறது. மக்களின் வாழ்வியல் முன்னேற்றம் காரணமாக கூவம் நதி கழிவுகளை சுமந்து கொண்டு நாற்றம் வீசும் சாக்கடையாக மாறியது. கூவம் நதியை மீட்டெடுக்க அரசு சார்பில் நடவடிக்கை முன்னெடுத்த போதிலும், மக்கள் கழிவுகளை கூவம் நதியில் வீசுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை கூவம் ஆற்றில் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு அருகே உள்ள கூவம் ஆற்றங்கரை ஓரம் குழந்தை சடலம் ஒன்று இருப்பதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயனைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி கூவம் ஆற்றில் இருந்த குழந்தையின் சடலத்தை மீட்டனர். குழந்தையின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தையை வீசி சென்ற நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூவம் ஆற்றில் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.