இந்திய ரிசர்வ் வங்கி அக்டோபர் இறுதி வரை ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளுக்குத் திருப்பித் தருவதற்கு கால அவகாசம் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் மற்றவர்களைக் கருத்தில் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுக்களை டெபாசிட் செய்வதற்கும், மாற்றுவதற்குமான தேதியை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. 3.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரூ.2,000 ரூபாய் நோட்டுகளில் 93 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பியுள்ளதாக மத்திய வங்கி செப்டம்பர் 1ஆம் தேதி அறிவித்திருந்தது. ஆகஸ்ட் 31ஆம் தேதி வர்த்தகம் முடிவடையும் போது புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகள் ரூ.24 லட்சம் கோடியாக இருந்தது. 3.14 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்த நோட்டுக்கள் 88 சதவிகிதம், ஜூலை 31-ஆம் தேதி வரை வங்கிகளுக்கு திரும்பியுள்ளது.
மே 19ஆம் தேதி, ரூ. 2,000 கரன்சி பில்களை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பில்களை வழங்குவதை நிறுத்துமாறும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் Clean Note Policy – யின் படி புழக்கத்தில் இருந்து 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சந்தன் சின்ஹா கூறுகையில், “ஆர்பிஐ காலக்கெடுவை நீட்டிக்கும் என்பது தன்னுடைய கணிப்பு என்றார். இந்த குறிப்பிட்ட காலத்தில் வெளிநாட்டில் இருந்தவர்கள், உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர்கள் என சில சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு நோட்டுகளை மாற்ற அவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படலாம்” அவர் தெரிவித்தார்.