கேரளாவில், கடந்த சில நாட்களில் மட்டும் 5 நபர்கள் நாய் கடித்ததாக மருத்துவமனைக்கு சென்று, தடுப்பூசி போட்ட பின் உயிரிழந்துள்ளனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ரன்னி என்ற பகுதியைச் சேர்ந்த சிறுமியை, ஆகஸ்ட் 14ஆம் தேதி தெருநாய் ஒன்று பலமுறை கடித்துள்ளது. இதில் முகம் மற்றும் கண்களில் சிறுமிக்குக் காயம் ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்பட்டது. 3 தவணைகள் தடுப்பூசி செலுத்திய நிலையில், செப்டம்பர் 10ஆம் தேதி நான்காம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட இருந்தது. இதற்கிடையே, தொடர் சிகிச்சையில் இருந்த அந்த சிறுமியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேரளாவில், கடந்த சில நாட்களில் மட்டும் 5 நபர்கள் நாய் கடித்ததாக மருத்துவமனைக்கு சென்று, தடுப்பூசி போட்ட பின் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தடுப்பூசிகளின் தரத்தை உறுதி செய்து சான்றிதழ் வழங்கும் பணியை, மத்திய மருந்து ஆய்வகம் மேற்கொள்கிறது. இதன் மூலம் சான்றிதழ் அளிக்கப்பட்ட தடுப்பூசிதான் சமீபத்தில் நாய்க்கடியால் இறந்த 5 பேருக்கும் போடப்பட்டது. இப்படி தடுப்பூசி போட்ட பிறகும் அவர்கள் இறந்துள்ளது, பொதுமக்கள் மத்தியில் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து, கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி மற்றும் தொகுதி எண் தொடர்பான விவரங்களுடன் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளோம். ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசியின் தரத்தை மத்திய அரசு ஆராய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். தெருநாய் கடித்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும், 7 நபர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.