சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து தூர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேமடைந்த அக்கம்பக்கத்தினர், திருமுல்லைவாயல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், துர்நாற்றம் வீசிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அழுகிய நிலையில், முதியவர் ஒருவரின் சடலமும், அதன் அருகிலேயே இளம்பெண் ஒருவரின் சடலமும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, இரண்டு சடலங்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து நடத்தப்பட்ட விசாரணையில் இறந்து கிடந்தது வேலூரைச் சேர்ந்த சங்கர் (78) என்பவரும், அவரது மகள் சிந்தியா (37) என்பதும் தெரியவந்தது. மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், ”சடலமாக மீட்கப்பட்ட சங்கர், வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிப்பட்டிருக்கிறது. மேலும், அவருக்கு சிறுநீரக பிரச்சனையும் இருந்ததால், ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையும் செய்து வந்துள்ளார். சங்கரின் மகள் சிந்தியா, கணவரைப் பிரிந்து தனது தந்தையுடன் தான் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிந்தியாவுக்கு சோசியல் மீடியா மூலம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் சாமுவேல் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
அவரிடம் சிந்தியா தன்னுடைய தந்தையின் உடல் நலம் குறித்து விவரித்ததோடு, அதற்கான சிகிச்சை பெற ஆலோசனைகளையும் கேட்டுள்ளார். அப்போது, மருத்துவர் சாமுவேல் நீங்கள் வேலூரில் இருந்து சிகிச்சை பெற முடியாது. ஆகையால், சென்னையில் வீடு எடுத்து தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ளலாம் என கூறியிருக்கிறார். இதையடுத்து, தந்தை – மகள் இருவரும் திருமுல்லைவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து, சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இந்நிலையில், சங்கரும் சிந்தியாவும் உயிரிழந்துள்ளனர். இருவரும் இறந்து சில மாதங்களாகியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மருத்துவர் சாமுவேலிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த சங்கர் மற்றும் சிந்தியாவின் சடலங்கள் தூர்நாற்றம் வீசாமல் இருக்க வீடு முழுவதும் வாசனை திரவியங்கள் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், வீடும் வெளிபக்கமாக பூட்டப்பட்டுள்ளது. சங்கரையும், சிந்தியாவையும் யாரும் தேடாததால் அவர்கள் இறந்த தகவல் உடனே தெரியவில்லை. இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே முழு விவரங்கள் தெரியவரும். தற்போது மருத்துவர் சாமுவேலைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறோம்” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.