கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக ஆனந்த் மஹிந்திரா மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்தாண்டு ஜனவரி 14ஆம் தேதி தனது நண்பர்களுடன் சென்ற அபூர்வ் என்பவரின் ஸ்கார்பியோ கார் விபத்துக்குள்ளானது. காரில் ஏர்பேக் (Airbag) வேலை செய்யவில்லை, அது இருந்திருந்தால் தனது மகன் உயிர் பிழைத்திருப்பான் என்று அபூர்வின் தந்தை ராஜேஷ் மிஸ்ரா சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் 2022 ஜனவரி 29ஆம் தேதி புகார் அளித்தார்.
ஆனால், ராஜேஷ் மிஸ்ராவின் குற்றச்சாட்டை நிறுவனத்தினர் ஏற்க மறுத்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தன்னை மிரட்டியதாகவும் ராஜேஷ் மிஸ்ரா குற்றம்சாட்டியுள்ளார். ராஜேஷ் மிஸ்ரா கடந்த 2020இல் தனது மகனுக்கு கருப்பு நிற ஸ்கார்பியோவை ரூ.17.39 லட்சத்திற்கு வாங்கி பரிசாக அளித்துள்ளார்.
இந்நிலையில், இதுதொடர்பாக உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, காரின் பாதுகாப்பு குறித்து தவறான உத்தரவாதம் அளித்ததற்காக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் நிறுவன ஊழியர்கள் 12 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.