fbpx

டிச.26, 2004!… வாரி சுருட்டிய ஆழிப்பேரலை!… ஆண்டுகள் கடந்தாலும் இன்றளவும் மாறாத வடுக்களாய் தொடரும் நினைவுகள்!

2004ம் ஆண்டின் டிசம்பர் 26ம் தேதி சுனாமி ஆழிப்பேரலை தாக்கி லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிய சோக தினத்தின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கடலோர மக்களுக்கு அலைகள் புதிதல்ல. அன்று வந்த அலையையும் சாதாரணமாகவே நினைத்தனர். ஆனால், லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 2004 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸின் மறுதினத்தை அவ்வளவு எளிதில் தமிழக நெய்தல்குடிகளால் மறக்க இயலாது. அந்த ஞாயிற்றுக்கிழமை எழும்பிய ஆழிப்பேரலை நெய்தல் நிலத்தில் துயர ரேகைகளைப் படரவிட்டது. இப்போதுவரை அந்தப் பாதிப்பில் உழன்றுகொண்டிருக்கின்றனர் அம்மக்கள். இந்தியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கைப் பேரழிவுகளில் சுனாமியும் ஒன்று.

2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள கடல்பகுதியில் அதிகாலை வேளையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 9.1 முதல் 9.3 ரிக்டர் அளவிற்குப் பதிவானது. இதன் காரணமாக ஏற்பட்ட சுனாமியால் சுமார் 14 நாடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அன்று வந்த சுனாமி அலைகள் சுமார் 30 மீட்டர் (100 அடி) உயரத்துக்கு எழுந்தன. இந்தியாவில், குறிப்பாகத் தமிழகக் கடலோர மாவட்டங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. இன்று வரை டிசம்பர் 26-ம் தேதி மறக்கமுடியாத நாளாக அனைவரின் உள்ளத்திலும் உள்ளது.

சுனாமியில் அதிகம் பாதிக்கப்பட்டது சென்னைதான். ஞாயிற்றுக் கிழமை அதிகாலையான அன்று, கடற்கரையில் நடைப்பயிற்சிக்குச் சென்றவர்கள், தூங்கிக் கொண்டிருந்த மீனவர்கள், கடற்கரையில் கடை வைத்துள்ளவர்கள் என நூற்றுக்கணக்கான மக்களை அள்ளிச் சென்றது சுனாமி. சென்னை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி மாவட்டங்கள். இதேபோல், கடலூர், பாண்டிச்சேரி எனச் சென்னை முதல் குமரி வரை கடலோரத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சூறையாடிச் சென்றது. தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

சென்னையில் 206 பேரும், கடலூரில் 610 பேரும் உயிரிழந்தனர். மேலும் கோடிக்கணக்கான பொருள்கள், இயற்கை வளங்கள், மரங்கள், கால்நடைகள் எனப் பெரும் இழப்பைக் கண்டது தமிழகம். பலர் வீடுகளையும், உறவினர்களையும், வளர்ப்பு பிராணிகளையும் இழந்து தவித்தனர். பாதிப்பின் தாக்கத்திலிருந்து மீண்டு வரவே பல மாதங்கள் ஆகின. இந்த சுனாமியின் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 14 நாடுகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 2,29,866 பேர் உயிரிழந்தனர். மேலும் 1,25,000 பேருக்கு மேல் காயமடைந்தனர். 43,786 காணாமல் போயினர். மேலும் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் வாழ்விடத்தை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடான இந்தோனேசியாவில் மட்டும் 1,67,736 உயிரிழந்துள்ளனர். 37,063 பேர் காணாமல் போயினர். மேலும் இலங்கை, தாய்லாந்து, சோமாலியா, மியான்மர் போன்ற நாடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் 35,322 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமி பாதிப்பின் நினைவாகக் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சுனாமி நினைவுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சுனாமி பாதிப்பு ஏற்பட்டு இன்றுடன் 19-வது ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், மக்கள் மனதில் ஆறாத வடுக்களாகவே உள்ளன.

Kokila

Next Post

#Just In | அனைத்து ரேஷன் கடைகளையும் உடனே திறங்க..!! 5 கிலோ அரிசி, துவரம் பருப்பு..!! முக்கிய உத்தரவு..!!

Tue Dec 26 , 2023
கடந்த 17, 18ஆம் தேதிகளில் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், 4 மாவட்டங்களும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் திறக்க வேண்டுமெனவும், […]

You May Like