ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான வெற்றியை அம்பாதி ராயுடுவுக்கு அர்ப்பணிக்க விரும்புவதாக சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடியது. இதில் முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 214 எடுத்து சென்னை அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்தது. மழைக்கு பின் தொடங்கிய போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 15வது ஓவரின் கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்று கோப்பையை தட்டிச்சென்றது.
முன்னதாக, 2023 ஐபிஎல் இறுதிப்போட்டியுடன் ஓய்வு பெறுவதாக சென்னை அணியின் நட்சத்திர வீரர் அம்பத்தி ராயுடு அறிவித்திருந்தார். இந்தநிலையில், இந்த வெற்றியை அம்பத்தி ராயுடுவுக்கு அற்பணிப்பதாக தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் எமோஷனலாக பேசியுள்ளார். அதில்,கடந்த ஐபிஎல் சீசன் மோசமானதாக அமைந்ததால், இந்த சீசன் எல்லோருக்கும் ஸ்பெஷலானது. வழக்கம் போல் ஸ்டைலாக கம்பேக் கொடுத்திருக்கிறோம். சேப்பாக்கம் மைதானத்தில் வென்றதோடு, அவே போட்டிகளிலும் வென்றிருக்கிறோம். அதேபோல் அணியின் அனைத்து வீரர்களுமே வெற்றியில் பங்களித்திருக்கிறோம். ரஹானே, கான்வே என ஏராளமான வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள்.
அம்பாதி ராயுடுவுக்கு போதுமான பந்துகள் விளையாடுவதற்கு கிடைக்கவில்லை. இந்த வெற்றியையும், கோப்பையையும் ராயுடுவுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். ஏனென்றால், இன்று கூட சிறந்த தொடக்கத்தை கொடுப்பது பற்றி ஆலோசித்தோம். எங்களிடம் விக்கெட்டுகள் இருந்ததால், 13வது ஓவரிலேயே வெல்வோம் என்று நினைத்தேன். ஆனால் கடைசி ஓவரின் கடைசி பந்தில் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.