மகளிர் பெயரில் பதிவாகும் பத்திரங்களுக்கு, பதிவு கட்டணத்தில் 1% குறைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பானது நாளை முதல் அமலுக்கு வரவுள்ளதாக பதிவுத்துறை செயலர் குமார்ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
மகளிருக்கான சம சொத்துரிமையை உறுதி செய்யும் நோக்கில், 1989ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இயற்றிய சட்டத்தின் வழிவழியில், திராவிட மாடல் அரசு தொடர்ந்து மகளிரின் உயர்விற்கும் அதிகாரத்தின் உறுதிப்பாட்டிற்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சமூகத்திலும் குடும்பத்திலும் மகளிரின் சமபங்கை உறுதி செய்யும் வகையில், 01-04-2025 முதல், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ரூ.10 இலட்சம் மதிப்பிற்குட்பட்ட வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துகளுக்கான பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும். இந்த அறிவிப்பினால் தற்போது நடைமுறையில் இருக்கும் பத்திரப் பதிவுகளில் 75% பேர் பயன்பெற முடியும். இதன் மூலம், மகளிரின் சுயசார்பு மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் மேலும் வலுப்பெறும் என்று அரசு நம்புகிறது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
அதன்படி, மகளிர் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவு கட்டணம் 1% குறைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணையும் வெளியிட்டிருந்தது. இதன் மூலம் பத்திரப் பதிவுகளில் 75% பதிவுகள் பயன்பெறக்கூடும். அதன்படி, பெண்கள் பெயரில் பதிவாகும் பத்திரங்களுக்கு, பதிவு கட்டணத்தில் 1% குறைப்பு நாளை முதல் அதாவது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக பதிவுத்துறை செயலர் குமார்ஜெயந்த் அறிவித்துள்ளார்.