கேரள மாநிலம் ஆலப்புழா அருகே சென்னிதலா பகுதியைச் சேர்ந்தவர் ராகவன் (92). இவரது மனைவியின் பெயர் பாரதி (90). இவர்களின் மகன் விஜயன். இவர்கள் அனைவருமே ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், ராகவன் மற்றும் பாரதியின் பெயரில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்நிலையில், மகன் விஜயன் முழு சொத்தையும் தனக்கு எழுதிக் கொடுக்க வேண்டுமெனக் கூறி அடிக்கடி தனது பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பின்னர், எழுதி தருவதாக பெற்றோர் சொன்னாலும், விஜயன் ஏற்க மறுத்துள்ளார். இதனால், பெற்றோரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தான், இன்று அதிகாலை 3 மணியளவில் அவர்களின் வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தனர்.
ஆனால், அதற்குள் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. மேலும், ராகவனும், பாரதியும் வீட்டிற்குள் உடல் கருகிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பெற்றோருடன் தங்கியிருந்த மகன் விஜயன் மட்டும் மாயமாகியுள்ளார்.
இதனால், பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில் அவர்களை வீட்டிற்குள் வைத்து மகன் விஜயன் தீவைத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர், தலைமறைவாக உள்ள விஜயனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Read More : தேர்தலை மனதில் வைத்து பீகாருக்கு மட்டும் அறிவிப்பு..!! தமிழ்நாட்டிற்கு ஏன் இல்லை..? எடப்பாடி பழனிசாமி கேள்வி