Fake Posts: போலியான வெடிகுண்டு மிரட்டல் உள்ளிட்ட தகவல்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டால், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக நம் நாட்டு விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இதுவரை 275க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. விசாரணையில் அவை அனைத்தும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. இந்த மிரட்டல்கள் அனைத்தும் மொபைல் போன் வாயிலாக இல்லாமல், எக்ஸ் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்கள் வாயிலாக விடுக்கப்பட்டன. இதுகுறித்து டில்லி ‘சைபர்’ குற்றப்பிரிவு போலீசார் எட்டு வழக்குகள் பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஐ.பி., எனப்படும் இணைய முகவரியை வைத்து மிரட்டல் விடுத்த நபர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுஉள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களின் சமூக வலைதள கணக்கு விபரங்களை வழங்கும்படி எக்ஸ் மற்றும் பேஸ்புக்கிற்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், சமூக வலைதள நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தளத்தில், தேச ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் தேச பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் போலியான தகவல்கள் வெளியானால், தகவல் – தொழில்நுட்ப சட்டம் 2021ன்படி அவற்றை உடனடியாக நீக்க வேண்டும். அதுமட்டுமின்றி, போலி தகவல் குறித்து 72 மணி நேரத்திற்குள் காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட போலி தகவல்களை பரப்பிய நபரின் அடையாளம் உள்ளிட்டவற்றை விசாரணை அமைப்புகளுக்கு வழங்கி உதவ வேண்டும். மக்களை பாதிக்கும் வகையில், விமானங்களுக்கு வெடிகுண்டு புரளி போன்ற தவறான தகவல்கள் மீது சமூக வலைதளங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தவறினால் அவற்றிற்கு சமூக வலைதளங்களே பொறுப்பு. அவை மூன்றாம் நபரின் கருத்து என்று சொல்லி சமூக வலைதளங்கள் தப்பிக்க முடியாது. ஐ.டி., சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் சமூக வலைதளங்கள் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.