சனாதன தா்மத்தை ஒழிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு, டெல்லியில் தமிழ்நாடு அரசின் முதன்மை உள்ளூறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி மூலம் டெல்லி பாஜக சார்பில் எதிர்ப்புக் கடிதம் வழங்கப்பட்டது.
அந்த கடிதத்தில், ”செப்டம்பர் 2, 2023 அன்று வெளியான செய்திகளின்படி, சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றும் போது சனாதன தர்மத்திற்கு எதிராக பேசினார். உதயநிதி ஸ்டாலின் உங்கள் மகன் மட்டுமல்ல. எந்த ஒரு இந்தியனின் மத உணர்வுகளையும், நம்பிக்கையையும் புண்படுத்த ஒரு அமைச்சரை அனுமதிக்காத இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு விசுவாசமாக சத்தியப் பிரமாணம் செய்த அமைச்சராக இருக்கிறார்.
இத்துடன் சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு அதை ஒழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். இது இந்தியர்களுக்கு எதிராக தீங்கிழைக்கும் நடவடிக்கையைத் தூண்டும் வெறுப்புப் பேச்சாக உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இது தண்டனைக்குரிய குற்றமாகும். அரசியல் சாசனப் பதவியில் இருப்பவரிடமிருந்து வரும் இத்தகைய கருத்து கவலைக்குரியது மற்றும் இது தமிழ்நாடு அரசின் நிலைமையைப் பிரதிபலிக்கிறது.
ஆகையால், உதயநிதி ஸ்டாலின் உடனடியாக அவரின் கருத்தை திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவரின் பின்னால் முதலமைச்சராகிய நீங்களும் உள்ளீர்கள் என்று அர்த்தம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என டெல்லி பாஜக எச்சரித்துள்ளது.