டெல்லி சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று (பிப். 5) காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். டெல்லியில் உள்ள 70 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிப். 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
காலை 11 மணி நிலவரப்படி 19.95% வாக்குகளே பதிவாகி உள்ளன. மேலும், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, டெல்லி வடகிழக்கு மாவட்டத்தில்தான் மற்ற பகுதிகளை விட அதிக வாக்குகள் பதிவாகி உள்ளது, அங்கு காலை 11 மணிவரை 24.87% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதையடுத்து, ஷாஹ்தாரா மாவட்டத்தில் 23.30% வாக்குகளும் பதிவாகி உள்ளன. அதே நேரத்தில் குறைந்தபட்சமாக மத்திய மாவட்டத்தில்தான் 16.46% வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் பெற்றோர்களான கோபிந்த் ராம் கெஜ்ரிவால் மற்றும் கீதா தேவி ஆகியோருடன் இன்று டெல்லியில் உள்ள லேடி இர்வின் சீனியர் செகண்டரி பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர். கெஜ்ரிவால் சக்கர நாற்காலியில் தனது பெற்றோர்களை அழைத்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.