மணீஷ் சிசோடியாவை, வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இரண்டாம் கட்டமாக மணீஷ் சிசோடியா டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கடந்த விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது, ஆனால் விளக்கம் திருப்திகரமாக இல்லை என கூறி கைது செய்யப்பட்டார்.
கடந்த 26-ம் தேதி சிபிஐ அவரை கைது செய்தது. இதைத் தொடர்ந்து அவரை 5 நாட்கள் காவலில் எடுத்த சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் சிசோடியாவின் சிபிஐ காவலை மேலும் 2 நாட்களுக்கு நீதிமன்றம் நீட்டித்தது. இந்நிலையில் 7 நாட்கள் காவல் முடிந்து, மணீஷ் சிசோடியா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.கே.நாக்பால் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
மணீஷ் சிசோடியாவை, வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அவரை அதிகாரிகள் திகார் சிறையில் அடைத்தனர்.