டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது வீட்டில் இல்லாத போது அவரின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தி அணைத்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக பல அறைகளில் அதிக அளவில் பணம் இருப்பதை தீயணைப்புத் துறையினர் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அந்தப் பணத்தை அவர்கள் மீட்டனர்.
நீதிபதியின் வீட்டில் இருந்து கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்த அறிக்கை கிடைத்ததைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற முடிவு செய்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான கொலிஜீயம், நீதிபதி வர்மாவை இடமாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இந்த நிலையில் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எந்த வழக்குகளையும் ஒதுக்கக் கூடாது என டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமாருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தை விசாரிக்க பஞ்சாப், ஹரியானா தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல் பிரதேச தலைமை நீதிபதி சந்தவாலியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளார். யஷ்வந்த் வர்மா, கடந்த 2021, அக்டோபரில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.