ஆர்சிபி அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டெல்லியின் ஆலோசகரான சவுரவ் கங்குலி, விராட் கோலிக்கு கை கொடுக்காமல் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூரு எம் சின்னச்சாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி விராட் கோலியின் பொறுப்பான அரைசதத்தால் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. 175 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட டெல்லி கேபில்டஸ் அணி களமிறங்கியது. இதில், பிருத்வி ஷா ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட்டில் வெளியேறினார்.
மிட்செல் மார்ஷ் டக் அவுட்டில் வெளியேற, அடுத்து வந்த யாஷ் துல் 1 ரன் என்று வரிசையாக ஒவ்வொருவராக ஆட்டமிழந்தனர். மணீஷ் பாண்டே மட்டும் பொறுப்பாக ஆடி 50 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இது டெல்லி கேபிடல்ஸ் அணியின் 5ஆவது தோல்வியாகும்.
டெல்லி அணி பேட்டிங் ஆடிய போது அந்த அணியின் வீரர் மிட்செல் மார்ஷ் மற்றும் அமன் கான் ஆகியோர் அடித்த பந்தை கேட்ச் பிடித்த விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டார். அதுமட்டுமின்றி வெளியில் அமர்ந்திருந்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி உள்பட அங்கு அமர்ந்திருப்பவர்களை வம்பிழுக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார். அங்கு டேவிட் வார்னர், ரிக்கி பாண்டிங், சவுரங் கங்குலி ஆகியோர் அமர்ந்திருந்தனர். அதோடு, அவர்களை முறைத்துக் கொண்டுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, இறுதியில் போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை கொடுத்தனர். அப்போது, சவுரங் கங்குலி ஒவ்வொருவருக்கும் கை கொடுத்துவிட்டு வந்தார். ஆனால், அவர் விராட் கோலிக்கு மட்டும் கை கொடுக்கவில்லை. அப்படியே ஒதுங்கி சென்றுவிட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தபோதே விராட் கோலிக்கும் அவருக்கு இடையே மனக்கசப்பு இருந்ததாகவும், இதனால், இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக விராட் கோலி நீக்கப்பட்டார் என விமர்சனங்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.