டிஜிட்டல் மீடியா மற்றும் OTT தொடர்களின் வருகையால், ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அலுவலக கூட்டங்கள், பள்ளி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் பயிற்சிகளும் வீட்டிலிருந்து தொடங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பலர் ஹெட்போன்களை கண்மூடித்தனமாக பயன்படுத்துகின்றனர். அதிக நேரம் இயர்போன், ஹெட்போன் போன்ற ஒலி சாதனங்களை பயன்படுத்துவதால், செவித்திறன் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. இதைத் தவிர்க்க பொதுசுகாதாரத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, பொதுசுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,
* சாதாரண அளவிலான ஒலியாக இருந்தாலும் ஹெட்போனின் தேவையற்ற பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். மேலும், ஒலி சாதனங்களை 50 டெசிபல் ஒலிக்கு மேலே இல்லாமல் பயன்படுத்த வேண்டும்.
* தினமும் இயர்போன் பயன்பாட்டை 2 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒலி சாதனத்தை பயன்படுத்தும்போது அடிக்கடி இடைவேளைகள் எடுத்து கொள்ள வேண்டும்.
* குறைந்த ஒலியில், அதிக இரைச்சலை தவிர்க்க கூடிய ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டும். மேலும், குழந்தைகள் அதிகமாக செல்போன் மற்றும் தொலைகாட்சிகள் பார்ப்பதை குறைக்க வேண்டும். ஏனெனில் இது மூளை வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்தும்.
* குழந்தைகள் ஆன்லைனில் விளையாடும் நேரத்தை குறைப்பதன் மூலம் அவர்கள் காது அதிக சத்தத்திற்கு உட்படுவதை தவிர்க்க முடியும். மேலும், இளைஞர்கள் சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தை குறைத்து குடும்ப உறுப்பினர்களிடம் செலவிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்.
* பொது இடங்களில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர்கள் சராசரி ஒலி 100 டெசிபலுக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யவேண்டும். காது கேட்கும் திறன் பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலம் உரிய நேரத்தில் சிகிச்சையை மேற்கொண்டு செவித்திறன் இழப்பை தவிர்க்க முடியும்.
* காது கேட்கும் திறன் முற்றிலும் பாதிக்கப்படும்போது, காது கேட்க உதவி கருவிகள் மூலம் கேட்கும் திறனை மீண்டும் பெற இயலாது. மேலும், நிரந்தர காது இரைச்சல் சிறு வயதிலேயே தொடர்ந்தால் மன அழுத்தம் உள்பட பல மனரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்தும்.