உயிரிழந்த சிறுவனை உப்பு பரிகாரத்தால் உயிர்த்தெழுச்செய்ய முடியும் என்ற நம்பிக்கையால் உடலை உப்பில் புதைத்து பலமணி நேரம் காத்திருந்த உறவினர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சர்வாரா என்ற கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுரேஷ் என்ற சிறுவன் (10) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். இந்நிலையில்இறந்த சிறுவனை உயிர்த்தெழச்செய்ய முடியும் என சிலர் கூறியுள்ளனர். அதற்கு உப்பு பரிகாரம் செய்ய வேண்டும். என தெரிவித்துள்ளனர். இதை நம்பிய பெற்றோர்கள் 80 கிலோ உப்பு வாங்கி வந்துள்ளனர். பின்னர் சிறுவனை படுக்க வைத்து உடலில் உப்பை கொட்டி முகம் மட்டும் வெளியில் தெரியுமாறு புதைத்துள்ளனர். சுமார் 4 மணி நேரத்திற்கும் காத்திருந்தும் சிறுவன் உயிர்த்தெழவில்லை. அப்போதுதான் அவர்கள் மூடநம்பிக்கை என்பதை உணர்ந்தனர். இறுதியாக சிறுவனின் உடலை அடக்கம் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வீரபத்ரா என்பவரிடம் எதற்காக இப்படி செய்தீர்கள் என கேட்டபோது , அவர் கூறியதாவது ’’ நாங்கள் வாட்சப்பில் ஒரு செய்தியை பார்த்தோம் சிறுவனர்கள் இவ்வாறு உயிரிழந்தால் மீண்டும் உயிர்பெற செய்யலாம் என்று அதில் இருந்தது. இவ்வாறு உப்பு பரிகாரம் செய்தால் உயிர்த்தெழச் செய்யமுடியும். குழந்தை இறந்து 2 மணி நேரத்திற்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. எனவே 4 மணி நேரமாக நாங்கள் உடலை உப்பில் வைத்திருந்தோம். ஆனால் உயிர்த்தெழவில்லை. ஒருவேளை சிறுவன் பல மணி நேரத்திற்கு முன்பே இறந்திருக்கலாம். அவரது பெற்றோருக்கு சரியாக தெரியவில்லை. அதனால் கூட பரிகாரம் வேலை செய்யாமல் இருந்திருக்கலாம். ’’என்றார்.
இதே போல மத்திய பிரதேசத்தின் பிட்டி கிராமத்தில் இறந்த குழந்தை ஒன்றை உயிர்த்தெழ வைக்க கடந்த மாதம் 19ம் தேதி பஜனை பாடினார்கள்.ஆனால் குழந்தை உயிர்த்தெழாததால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. மற்றொரு சம்பவத்தில் பக்ஷேரா என்ற கிராமத்தில் உள்ள குல்தேவி என்ற கோயிலில் எலும்புடன் வந்த சிலர் அம்மனை வழிபட்டு பஜனை பாடினார்கள். அவர்களிடம் விசாரித்ததில் அம்மன் தனது கனவில் வந்து இறந்த குழந்தையின் எலும்புக்கூடை கொண்டு வந்து பஜனை பாடினால் உயிர் கிடைக்கும் என கூறியதாக கூறினார்கள்.