இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து, அந்நாட்டு மக்கள் வேலைவாய்ப்பு தேடி அதிகளவில் வெளிநாடுகளுக்குச் செல்ல தொடங்கி உள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் – ரஷ்யா போர் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால், இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு சரிந்ததால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் அந்நாட்டு அரசு உள்ளது. இதனால், உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து, அவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதேபோல், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய பணம் இல்லாததால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டின் வர்த்தகம் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது.
இதை கண்டித்து அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தொடர் போராட்டங்களால் நிலைமை சீராகவில்லை. மாறாக மேலும் மோசடைந்து வருகிறது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். இதில் இருந்து குடும்பத்தை காக்கும் நோக்கில் ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் வெளிநாடுகளுக்கு குறிப்பாக சவூதி அரேபியாவுக்கு வேலை தேடி செல்லத் தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக, கொழும்பில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தின் முன் இளைஞர்களும், இளம்பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து பாஸ்போர்ட் பெற்று வருகின்றனர்.