புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு புதுவை முதல்-அமைச்சராக ஜானகிராமன் இருந்தபோது கடந்த 1997-ம் ஆண்டு யானை ஒன்று தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. அந்த யானைக்கு லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது. யானை லட்சுமி நாள்தோறும் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. பக்தர்களும் யானைக்கு பழம், அருகம்புல் உள்ளிட்டவற்றை வழங்குகின்றனர். தொடர்ந்து பக்தர்களிடம் அமோக வரவேற்பை யானை லட்சுமி பெற்றுள்ளது. புத்துணர்ச்சி முகாமுக்கு செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ச்சியாக ஆசி வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பர் மதம் 30ஆம் தேதி யானை லட்சுமி வழக்கம் போல் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நடைபயிற்சிக்கு அழைத்து சென்ற போது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் 25 ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த யானை லட்சுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கோயில் வாசலில் கம்பீரமாக நின்று கொண்டு, வரும் பக்தர்களை ஆசீர்வாதம் செய்யும் யானை லட்சுமி அங்கு இல்லாமல் இருப்பது பக்தர்களுக்கு வேதனையைத் தருகிறது. இந்நிலையில் யானை லட்சுமி உயிரிழந்த காமாட்சி அம்மன் கோவில் வீதியில் புதுச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் ராம் முனுசாமி என்பவர் யானை லட்சுமிக்கு சிலை வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றுக் கலந்து கொண்டு யானைக்கு அஞ்சலி செலுத்தினர்.