நடிகர் தனுஷ் – நயன்தாரா இடையே ஏற்பட்டுள்ள மோதல் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷ் மீது நயன்தாரா அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். நெட்பிளிக்ஸில் வெளியாக இருந்த தனது Nayanthara : Beyond The Fairy Tale என்ற ஆவணப்படத்தை வெளியிட தனுஷ் தடையாக இருந்ததாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
மேலும் தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரௌடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த தனுஷ், தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை என்றும் வெறும் 3 விநாடி காட்சிகளை பயன்படுத்தியதற்கு ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது. நயன்தாராவின் கடிதம் வெளியான உடனேயே பலர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தாலும் பலர் தனுஷ் மீது எந்த தவறும் இல்லை என்றே கருத்து பதிவிட்டு வருகின்றனர். தனது திருமண வீடியோவை கோடிக்கணக்கில் விற்ற நயன்தாரா தயாரிப்பாளராக ஏன் தனுஷ் பணம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்றும் கூறி வருகின்றனர். மேலும் தனது ஆவணப்படத்தின் புரோமோஷனுக்காக நயன்தாரா தனுஷ் மீது அவதூறு பரப்புவதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தனுஷ் குறித்து, விக்னேஷ் சிவன் பேசிய பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பேசும் விக்னேஷ் சிவன், தனுஷ் தான் முதலில் நானும் ரவுடி தான் படத்தின் கதையை நயன்தாராவிடம் சொல்ல வைத்ததாக கூறியுள்ளார்.
மேலும் நயன்தாராவிடம் நானும் ரவுடி தான் கதையை தனுஷ் சார் என்னை சொல்ல வைத்தார். நயனுக்கு கதை பிடித்திருந்தது. அவர் நடிக்க வந்தவுடன், முதலில் இந்தப் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டாத நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முடிந்தது. திரைக்கதை குறித்து அவருக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நயன் ஓ.கே சொன்னதை அடுத்து விஜய் சேதுபதில் நானும் ரௌடி தான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டா. நயனுடன் நிறைய நேரம் செலவிட இந்தப் படம் வழி வகுத்தது.” என்று விக்னேஷ் சிவன் கூறியிருந்தார்.
ஆனால் தனுஷுக்கு எதிராக நயனும் விக்னேஷ் சிவனும் பேசிவருவது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். முன்னதாக நானும் ரௌடி தான் படப்பிடிப்பின் போது தான் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலிக்க தொடங்கினர். இருவரும் சில ஆண்டுகள் டேட்டிங் செய்து வந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். பின்னர் 2022-ம் ஆண்டு ஜூன் 9, அன்று இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.
மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட் ஒன்றில் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் மிகவும் ஆடம்பரமான முறையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அஜித், விஜய் சேதுபதி என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த ஜோடி அக்டோபர் 2022 இல் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடிக்கு உயிர், உலக் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.