சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இன்றைய போட்டிக்கு பிறகு ஓய்வை அறிவிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த கேப்டனாக கொண்டாடப்படும், தோனி இன்றுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனாலும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்தார்.
இந்நிலையில் தான், இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே – டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியின் முடிவில் தனது ஓய்வு தோனி அறிவிக்க உள்ளதாக சிஎஸ்கே அணியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, சிஎஸ்கே அணியின் மேலாளர் ரஸல், திடீரென தோனியுடன் தான் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தை பகிர்ந்து, சில நினைவுகள் வாழ்நாள் முழுவதும் நிலைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
அதோடு முன்னாள் கிரிக்கெட் வீரரான பிரன்னா எனப்படும் பீடாக், ”சனிக்கிழமை போட்டியானது அவருடைய கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்காது என நம்புகிறேன்” என சூசகமாக தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், தோனியின் பெற்றோர் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு இன்று வருகை தந்துள்ளனர். இதனால், சிஎஸ்கே மற்றும் தோனியின் ரசிகர்கள், அவர் உண்மையில் ஓய்வு பெறுகிறாரோ என்ற கலக்கத்தில் உள்ளனர். முன்னதாக ஒருமுறை, தான் சென்னை மைதானத்தில் தான் ஓய்வை அறிவிப்பேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.