நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் போன்பே, கூகுள்பே உள்ளிட்ட செயலிகள் மூலமாக அதிக அளவில் யுபிஐ பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதனால், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. தற்போது சாலையோர கடைகள் மூதல் பெரிய பெரிய மால்கள் வரை யுபிஐ மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிகிறது. இந்தநிலையில், யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும்போது அவ்வபோது தவறுதல்களும் நிகழ்கின்றன. அதாவது சில பேர் தவறுதலாகவும் பணப்பரிவர்த்தனை செய்துவிடுகின்றனர். இருப்பினும், பணத்தை எவ்வாறு திரும்பப்பெறுவது என்று தெரியாமல் அலைமோதுகின்றனர். எனவே, தவறுதலாக அனுப்பிய பணத்தை திரும்பப் பெறுவது எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் எந்த யுபிஐ சேவை வழங்குனர் (ஜிபே, பேடிஎம், போன்பே) வழியாக பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதோ அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளியுங்கள். அதிகப்பட்சம் 24 – 48 மணிநேரத்திற்குள் பரிவர்த்தனை நீக்கப்பட்டு உங்களுக்கு பணம் திரும்ப கிடைக்க வழி செய்யப்பட்டுவிடும்.
ஒருவேளை யுபிஐ சேவை வழங்குனர் தீர்க்கப்படாத கோரிக்கைகளை இந்திய தேசிய பண செலுத்துகை நிறுவனத்தின் (என்.பி.சி.ஐ.) இணையத்தளத்தில் புகார் அளிக்கலாம். நீங்கள் இங்கு புகார் அளிக்கும் போது பரிவர்த்தனைக்கான ஆதாரங்களை கண்டிப்பாக ஆன்லைனில் இணைக்க வேண்டும். பரிவர்த்தனை வகை, வங்கி பெயர், யுபிஐ ஐடி, மெயில் ஐடி, செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களை வழங்க வேண்டும். அதன்பின்னர் என்.பி.சி.ஐ. சார்பில் உங்களைத் தொடர்பு கொண்டு புகாரை நிவர்த்தி செய்வார்கள்.
இது ஒருபுறம் எனில் நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியைத் தொடர்பு கொண்டும் புகார் தரலாம். நேரிலோ அல்லது வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டோ இந்தப் புகார் கொடுக்கலாம்.