ஜி பே, ஃபோன் பே, பே டிஎம் போன்ற யுபிஐ சேவைகளில் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் அதை திரும்ப பெறுவது தற்போது எளிதாகிவிட்டது. எளிமையான முறைகள் மூலம் பணத்தை திரும்ப பெற முடியும்.
நாடு முழுவதும் யுபிஐ பயன்பாடு தற்போது உச்சம் தொட்டுள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்போதுதான் வென்மோ போன்றவைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் கொரோனா காலத்தில் இருந்தே யுபிஐ பயன்பாடு உச்சத்தில் உள்ளது. அனைத்து விதமான சேவைகளுக்கும் தற்போது யுபிஐ பயன்பாடு வந்துவிட்டது. பெரிய பெரிய நிறுவனங்கள் தொடங்கி சாதாரண சாலையோர கடைகளுக்கு கூட யுபிஐ வந்துவிட்டது. அதேபோல் பெரிய பெரிய அரசு நிறுவனங்கள் கூட யுபிஐ பயன்பாட்டை தொடங்கிவிட்டன.
மற்றொரு பக்கம் ஆன்லைன் பேமெண்ட் அனைத்தும் தற்போது யுபிஐ சேவையை வழங்குகின்றன. மக்கள் யுபிஐ பயன்பாட்டை வெகுவாக விரும்ப தொடங்கிவிட்டனர். சமீபத்தில் கூட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்பட்டது. வணிக பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது. யுபிஐ மூலம் பிபிஐ மோடில் வணிக பரிவர்த்தனைக்கு பணம் அனுப்பினால் கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் ஜி பே, பே டிஎம் போன்ற யுபிஐ சேவைகளில் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் அதை திரும்ப பெறுவது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
உதாரணமாக நீங்கள் ஒரு நபருக்கு பணம் அனுப்ப வேண்டும். ஆனால், தவறுதலாக வேறு ஒருவருக்கு பணம் அனுப்பி விடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த பணத்தை உங்களால் திரும்ப பெற முடியும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, தவறான பணப் பரிமாற்றம் நடந்தால், 24-48 மணிநேரத்தில் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். பணம் பெறுபவர் மற்றும் பணம் செலுத்துபவர் வங்கிகள் ஒரே வங்கியாக இருந்தால், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு குறைந்த நேரம்தான் எடுக்கும். ஆனால், இரண்டு வங்கிக் கணக்குகளும் வேறாக இருந்தால், பணத்தைத் திரும்பப்பெற அதிக நேரம் எடுக்கும்.
எப்படி பெறுவது..? ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, நீங்கள் தவறான பரிவர்த்தனை மேற்கொண்டால் உடனே நீங்கள் பரிவர்த்தனை மேற்கொண்ட யுபிஐ செயலியில் புகார் அளிக்கலாம். தவறான பரிவர்த்தனையின் ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து, நீங்கள் பணத்தை மாற்றிய GPay, Phonepe, Paytm அல்லது UPI ஆப்ஸின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் ஹெல்ப்லைனில் மெசேஜாக் அனுப்ப வேண்டும். இங்கே உங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஆர்பிஐ அமைப்பின் NPCI portal இணைய பக்கத்தில் புகார் அளிக்கலாம்.
NPCI அதிகாரப்பூர்வ வலைத்தளமான npci.org.in ஐப் பார்வையிடவும். அதில் “What we do tab ” என்ற பக்கத்திற்கு சென்று, பின்னர் “UPI” ஐத் தேர்ந்தெடுத்து, “Dispute Redressal Mechanism ” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதில் இருக்கும் புகார் பெட்டியில் நீங்கள் மேற்கொண்ட தவறான டிரான்சாக்ஸனின் விவரங்களை பதிவிடவும் . அதில் UPI பரிவர்த்தனை ஐடி, வங்கி பெயர், விர்ச்சுவல் பேமெண்ட் முகவரி, மாற்றப்பட்ட தொகை, பரிவர்த்தனை தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை கொடுக்க வேண்டும். இதை செய்தால் அடுத்த 24- 48 மணி நேரத்தில் பணம் திரும்ப வரும். இதை செய்தும் பணம் வரவில்லை என்றால் நேரடியாக ஆர்பிஐ பக்கத்தில் உள்ள புகார் தளத்தில் புகார் கொடுத்து பணத்தை திரும்ப பெறலாம்.