நீங்கள் பிளஸ் 2 தேர்வு எழுதவில்லையா? அல்லது தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லையா? அடுத்து வரப் போகும் தேர்வை எழுதி, நீங்கள் தேர்ச்சி பெறுவதற்குள் ஓர் ஆண்டு வீணாகப் போய்விடும் என்று கவலைப்படுகிறீர்களா? அத்தனைக்கும் ஓர் அற்புதமான தீர்வை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு. அச்சத்தை விட்டு, மீதமுள்ள காலத்தைப் பயன்படுத்தி எப்படி முன்னேறலாம் என வழிகாட்டுவதற்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆலோசனை முகாம் நடந்து வருகிறது. அது பற்றி உங்களுக்குத் தெரியுமா?
பிளஸ் 2 முடித்தால்தான் அடுத்த உயர்படிப்பு போகமுடியும் என்பதில்லை. இப்போது முடித்துள்ள கல்வித்தகுதியை வைத்தே பாலிடெக்னிக் போன்ற தொழிற்படிப்பைப் படித்து முன்னேறப் பல வழிகளை ஏற்படுத்தித் தருவதற்காகத்தான் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதற்காகவே செயல்பட்டு வருகிறது Career Guidance Cell. அதாவது தொழிற் படிப்புகளுக்கான வழிகாட்டி மையம். தனது 10ஆம் வகுப்புக்குப் பிறகு பாலிடெக்னிக் படிப்பை மேற்கொண்டவர்தான் ஹேம ரூபா. அவர் 12ஆம் வகுப்புக்குப் போகவில்லை. தனக்கு ஏதேனும் ஒரு தொழிற்கல்வி தெரிந்திருந்தால் போதும், அதைக் கொண்டு ஒரு வேலைவாய்ப்பைப் பெற்றுவிடலாம் எனத் திட்டமிட்டார். அரசு வழங்கிய ஆலோசனையை ஏற்றுத் தொழிற்கல்வியில் சேர்ந்தார். இப்போது இவர் தரமணியில் செயல்பட்டு வரும் மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.
அடுத்தது பொன் ஜோதி. இவரும் அதே பாலிடெக்னிக் மாணவிதான். அவர் கூறுகையில், “எங்கள் கல்லூரியில் அட்வான்ஸ் லேப் வசதிகள் இருக்கின்றன. அதைக் கொண்டு நாங்கள் நேரடியான அனுபவத்தைப் பெற்று வருகிறோம். படிப்பதை உடனுக்குடன் செயல்முறை வடிவில் செய்து பார்ப்பதால், நல்ல அனுபவம் கிடைக்கிறது. எதையும் முழுமையாகக் கற்றுக்கொண்ட திருப்தி ஏற்படுகிறது. அதே மாதிரி படித்து முடித்தவுடன் நேரடியாக வேலைவாய்ப்புக்கும் உத்தரவாதம் இருக்கிறது. ப்ளேஸ்மென்ட்டை கல்லூரி நிர்வாகமே உருவாக்கிக் கொடுக்கிறது” என்கிறார்.
இதே மத்திய பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர்தான் யாஷ் அகமத். “தினமும் திருவொற்றியூரில் இருந்துதான் தரமணிக்கு வந்து போகிறேன். பயணம் பற்றி எந்தப் பிரச்சனையும் இல்லை. தமிழக அரசின் இலவச பஸ் பாஸ் இருக்கிறது. ஆகவே, எந்தப் பொருளாதார நெருக்கடியும் இல்லாமல் வந்து படிக்க முடிகிறது. அத்துடன் கல்லூரியில் ஊக்கத்தொகையும் கிடைக்கிறது” என்கிறார்.
இவரைப் போன்று இங்குப் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அரசு ஊக்கத்தொகை தருகிறது. இலவசமாகவே பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்குகிறது. . எனவே இந்தக் கல்லூரியில் படிப்பைத் தொடங்கும் ஒருவர், இறுதிவரை எந்த நெருக்கடியும் இல்லாமல் கல்லூரி படிப்பை முடித்து தரமான வேலையையும் பெற்று வெளியேறலாம் என்கிறார்கள் அரசு தரப்பில் ஆலோசனை வழங்கும் வல்லுநர்கள்.
மேற்குறிப்பிட்ட மூவரும் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள். வெங்கடேஷ் என்ற மாணவர் 12ஆம் வகுப்புக்குப் பிறகு இந்த பாலிடெக்னிக் கல்லூரியைத் தேர்வு செய்தவர். அவர் கூறுகையில், ”நான் பிளஸ்2 முடித்துவிட்டு வந்ததால், நேரடியாக 2 ஆண்டு வகுப்பில் சேர்ந்தேன். 10ஆம் வகுப்பு படித்து வந்தால் 3 ஆண்டுகள் வரை தொழிற்கல்வி கற்க வேண்டும். 12ஆம் வகுப்பு முடித்து வந்தால் 2 ஆண்டுகள் வரைதான் படிக்க வேண்டியிருக்கும். நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கிறேன். இங்கே ‘ட்ரிபிள் இ’ இருக்கிறது. ‘இசி’ இருக்கிறது. மெக்கானிக்கல், ஃபிஷரிங் எனப் பல படிப்புகள் இருக்கின்றன. இந்தப் படிப்பை முடித்தால் நல்ல MNC கம்பெனியில் நல்ல வேலைக்குப் போகலாம். என்னைப் போலவே நீங்களும் இந்தக் கல்லூரியைத் தைரியமாகத் தேர்வு செய்யலாம். அதிகம் செலவு செய்து பொறியியல் படிப்பு படிக்க முடியவில்லை என வருத்தப்படத் தேவையில்லை. அதற்கு இணையான இந்தப் படிப்புகளை நீங்கள் தேர்வு செய்யலாம்” என்கிறார்.
தொழிற்கல்வி சார்ந்த படிப்புகள் குறித்து மத்திய பாலிடெக்னிக் கல்லூரியின் சீனியர் டெக்னிகல் ஆஃபீசர் பழனியாண்டி கூறுகையில், “தொழிற்கல்லூரியில் படிக்க அதிக பட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது. ஒருவர் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், பாலிடெக்னிக்கில் சேரலாம். 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெறவில்லையா? 8ஆம் வகுப்புதான் படித்து இருக்கிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் ஐடிஐ படிப்பில் சேர்ந்து உங்கள் படிப்பை மேற்கொள்ளலாம்.
ஆகவே, தேர்ச்சி பெறாத வகுப்பைப் பற்றி யோசித்து காலத்தை வீணாக்காமல், பாலிடெக்னிக் படிப்புகளும் வாழ்க்கைக்கான வெற்றிப் படிக்கட்டுகள்தான் என்பதை மாணவர்களாகிய நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு ஏற்படுத்தித் தரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றிபெற உங்களை அன்புடன் அழைக்கிறோம்” என்கிறார்.