சென்னைக்கு வந்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மரியாதை நிமித்தமாகவே ஸ்டாலின் அவர்களை சந்தித்தேன் என பேட்டி அளித்துள்ளார்.
சென்னையில் நடைபெறும் மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னைக்கு வந்தார். அவர் ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று அங்கு அவரை சந்தித்தார். பின்னர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகையில், ’’ மேற்கு வங்க முதல்வர் மம்தா பல முறை சென்னைக்கு வந்துள்ளார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் வந்திருக்கின்றார். மரியாதை நிமித்தமாக என்னை சந்தித்தார் என்றார் மேலும் மேற்கு வங்கத்திற்கு விருந்தினராக வர வேண்டும் என தெரிவித்தார் ’’ என்றார்.
பின்னர் பேசிய மம்தா பானர்ஜி, ’’ ஸ்டாலின் எனக்கு சகோதரர் போன்றவர். நான் தனிப்பட்ட முறையில் அவரை சந்தித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். சென்னை வந்துவிட்டு ஸ்டாலினை சந்திக்காமல் செல்ல முடியுமா? அவரை சந்திப்பது என் கடமை. எனவே நான் வந்து ஒரு கோப்பை தேநீர் குடித்தேன். சென்னையில் பிரபலம் தேநீர்தானே? என்றார்..
முன்னதாக கொல்கத்தாவில் பிரபலமான இனிப்புகளை முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் வழங்கினார். மேலும் இந்த சந்திப்பின் போது அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், தமிழக முதல்வர் ஸ்டாலினும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.