நெல்லை மாவட்டம் இராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசீர். இவர், கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கு தங்கத்தாய் (20) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். தங்கத்தாய் கங்கைகொண்டான் சிப்காட்டில் பணியாற்றி வந்தார். அப்போது இவருக்கு மாற்று சமூகத்தை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்ததை அடுத்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் காதலை தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், காதல் விவகாரம் தொடர்பாக தங்கத்தாய் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றியதை அடுத்து ஆத்திரத்தில் தங்கத்தாயின் தம்பி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அக்கா என்று கூட பாராமல் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.
இதையடுத்து, தங்கத்தாயின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.