கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே இருக்கும் பொம்மதாதனூர் ஊராட்சி புதூர் கிராமத்தில் வசிப்பவர் லட்சுமணன் (50). இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு நாகராஜ் (24), சிவகுமார் (22) என்ற மகன்களும், தனலட்சுமி (20) என்ற மகளும் இருக்கின்றனர்.
இந்நிலையில் லட்சுமணன் நேற்று தனது வீட்டின் அருகே இருக்கும் வெற்றிலை தோட்டத்தில் புதையல் எடுக்க குழி தோண்டினார். மேலும் அதில் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை வைத்து பூஜை செய்துள்ளார். அதுமட்டுமின்றி கோழியை பலியிட்டு வழிபாடு நடத்தியதாக தெரிகிறது. இந்த பூஜை செய்த சிறிது நேரத்திலேயே லட்சுமணன் அதே குழியில் உட்கார்ந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
லட்சுமணன் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். இந்த சம்பவம் குறித்து கெலமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு சென்ற அவர்கள் லட்சுமணன் மர்ம சாவு குறித்து விசாரணை நடத்தினர்.
இதை தொடர்ந்து அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் அனுப்பி வைத்தனர். லட்சுமணனின் உடலில் எந்த காயங்களும் இல்லாததால் அவர் எவ்வாறு இறந்தார், என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதையலுக்காக தோண்டப்பட்ட குழியில் குழி தோண்டியவரே மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.