சில வாரங்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) வெளியிடுவது பற்றிய செய்திக் குறிப்பை வெளியிட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் நடந்த சோதனை முயற்சியின் அடிப்படையில், டிஜிட்டல் நாணயம் இன்று (நவம்பர் 1) அறிமுகப்படுத்த உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சோதனை முறையில் டிஜிட்டல் கரன்சி இன்று முதல் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதை முதற்கட்டமாக e₹-W என்ற டிஜிட்டல் கரன்சியை மொத்த பரிவர்தனைகளுக்கு மட்டும் பயன்படுத்தலாம் எனவும் அதேபோல் அரசு அரசுப் பத்திரங்கள், பங்கு பரிவர்த்தனை போன்ற குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளில் இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தி வாங்கி கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்ததெந்த வங்கிகளில் இந்த கரன்சியை பெறமுடியும் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ’பாரத் ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎஃப்சி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி, முதல் வங்கி, எச்எஸ்பிசி போன்ற 9 வங்கிகளில் இந்த டிஜிட்டல் நாணயத்தை பயன்படுத்தலாம்.
தற்போது நடைமுறையில் உள்ள காகித வடிவிலான பணத்துக்கு மாற்றாக டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த முடியும். இந்தியாவில் 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டில் ரூபாய்க்கு இணையான டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி வெளியிடும் என்று அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அதற்கான சோதனை முறையில் இன்று டிஜிட்டல் கரன்சி வெளியிடப்பட உள்ளது. மக்களுக்கும் வங்கிகளுக்கும் டிஜிட்டல் நாணயங்களின் பயன்பாடு, பிரச்சனைகள், தீர்வுகள், நன்மைகள் ஆகியவற்றை விளக்க “கான்செப்ட் நோட்” என்பதை வெளியிட்டுள்ளது.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அறிவிக்கப்பட்ட இந்த கரன்சி முறை, அடுத்த ஒரு மாதத்தில், சில்லரை வர்த்தக அளவில் இந்த கரன்சியின் பயன்பாட்டு முறையை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.