அதிமுக மூத்த தலைவர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பொறுத்தவரை, சர்ச்சைகளுக்கு பெயர்போனவர். சில சமயம் இவரது பேச்சுக்கள், செல்லூர் ராஜுவையே ஓவர்டேக் செய்துவிடும். கடந்த ஆட்சி காலத்தில், இவர்கள் இருவரும் மாறி மாறி சர்ச்சைகளில் சிக்கினாலும், பொதுமக்கள் எல்லாவற்றையும் ஈஸியாக எடுத்து கொள்ள பழகிவிட்டனர் போலும். காரணம், இருவருமே வெள்ளந்திகள். மனசில் எதையும் வைக்காமல் பேசுபவர்கள் என்பதால்தான்.
இந்நிலையில், திண்டுக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “எடப்பாடி பழனிசாமி ஆதரவு இருந்ததால்தான், ஓபிஎஸ் வேட்டி கட்டி வெளியே வர முடிந்தது. ஆனால், இப்போது தெய்வம் தந்த தண்டனையால் அவரால் அதிமுக வேட்டியைக்கூட கட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் பேசுவதை எல்லாம் கணக்கிலேயே எடுத்துக்கொள்ள வேண்டாம். அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.
பாஜகவை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவரிடம் குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக ஆதரிக்குமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இது தொடர்பான நிலைப்பாடுகளை எங்கள் பொதுச்செயலாளர், புரட்சித்தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு உள்ளார்” என்று ஒரே போடாக போட்டார். என்னாது, அதிமுக பொதுச்செயலாளர் அண்ணாமலையா? என்று அங்கிருந்த அதிமுக நிர்வாகிகளி அதிர்ச்சியடைந்து விழித்தபடியே நின்றனர். திண்டுக்கல்லால் சீரியஸாக தந்த இந்த பேட்டியின் வீடியோதான் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.