கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் தொடர்பான செய்திக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் என்ற செய்தி 21.08.2022 தேதி தினசரி நாளிதழில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கீழ்க்காணும் மறுப்பு அறிக்கை வெளியிடப்படுகிறது. அதில், ”மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் விளம்பர எண் 1/2022 நாள் 18.08.2022 தேதி அறிவிக்கை போலியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் தலைமை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என்றும் இதற்காக விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் அனுப்பப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விளம்பரம் ஏதும் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
எனவே, போலி விளம்பரத்தை பார்த்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம். மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எனவே, அவ்வாறு பரப்பப்பட்டு வரும் பொய்யான தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.