இந்தியாவின் மிகவும் தொலைநோக்குப் பார்வை கொண்ட இயக்குனர்களில் ஒருவர் தான் ஷங்கர். பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கர், பிரமாண்டமான காட்சிகளையும், சமூகக் கருத்துக்களை கொண்ட படங்களை உருவாக்கியதில் பெயர் பெற்றவர்.
கும்பகோணத்தில் பிறந்த ஷங்கர் டிப்ளமோ படிப்பை முடித்த பின்னர் நடிகராக வேண்டும் என்ற ஆசை உடன் சென்னை வந்தார். ஒரு சில படங்களில் அவர் நடித்திருக்கிறார். பின்னர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
1993-ம் ஆண்டு ‘ஜென்டில்மேன்’ மூலம் இயக்குநராக அறிமுகமானார். அர்ஜுன், மதுபாலா, நம்பியார் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த காலக்கட்டத்தில் வெளியான படங்களுடன் ஒப்பிடும் போது ஜெண்டில் மேன் படம் கூடுதல் பட்ஜெட்டில் உருவானது.
எனினும் முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஷங்கர் பின்னர் பிரபுதேவா – நக்மாவை வைத்து 1994-ம் ஆண்டு காதலன் என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
1995-ம் ஆண்டு கமல்ஹாசனை வைத்து ஷங்கர் இயக்கிய இந்தியன் படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று, அந்த ஆண்டு அதிக வசூல் செய்த படமாகவும் மாறியது.
இதை தொடர்ந்து தனது படங்களில் அதிக பிரம்மாண்டத்தை சேர்க்க தொடங்கினார் ஷங்கர். தொடர்ந்து அவர் இயக்கிய ஜீன்ஸ், முதல்வன் படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது. 2003-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் கலவையான விமர்சனங்களை வசூல் ரீதியாகவும் ஓரளவு ஹிட் படமாகவே அமைந்தது.
தொடர்ந்து அந்நியன், சிவாஜி, எந்திரன் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை வழங்கினார் ஷங்கர். நண்பன், ஐ ஆகிய படங்கள் சுமாரான வெற்றியை பெற்றன. பின்னர் 2018-ம் ஆண்டு அவர் இயக்கிய 2.0 படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனினும் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்று அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது.
தனது படங்களில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பிரமாண்டமான கதைசொல்லலுடன் இந்திய திரைப்படத் தயாரிப்பின் எல்லைகளைத் தாண்டி சென்றார் ஷங்கர். இப்படி தோல்வியே பார்க்காத இயக்குனராக வலம் வந்த ஷங்கர் தான் தற்போது தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் படு தோல்வியை சந்தித்தன.
இதுபோதாதென்று எந்திரன் படத்தின் கதை திருட்டு வழக்கில் ஷங்கருக்கு சொந்தமான ரூ.10 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இதற்கு தனது கண்டனத்தையும் ஷங்கர் பதிவு செய்துள்ளார்.
இது ஒருபுறமிருந்தாலும் இயக்குனர் ஷங்கரின் சம்பளம் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராகவும் அவர் மாறி உள்ளார்.
தனது திரை வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில், ஒரு படத்திற்கு ரூ.1-2 கோடி சம்பளம் வாங்கிய ஷங்கர், ஆனால் சிவாஜி படத்தின் போது அதாவது (2007) வாக்கில், ரூ. 10 கோடி சம்ப்ளம் பெற்ரார்.
எந்திரன் (2010) படத்திற்காக, ரூ. 25 கோடி சம்பளம் வாஙிக்ய அவர் 2.0 (2018) படத்திற்கு ரூ. 40 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. தனது சமீபத்திய வெளியீடுகளான ‘இந்தியன் 2’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ படங்களுக்கு ஒரு திட்டத்திற்கு ரூ. 50 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஷங்கர் வலம் வருகிறார். அவர் பல படங்களைத் தயாரித்து லாபகரமான படங்களை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் இயக்குனர் ஷங்கரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஷங்கரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் அவருக்கு பல சொத்துக்கள் உள்ளன, அவற்றில் அவரது ஆடம்பரமான வீடு உட்பட, ரூ. 6 முதல் 8 கோடி வரை மதிப்புள்ளவை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரியல் எஸ்டேட் முதலீடு, பல்வேறு வணிக முயற்சிகளில் முதலீடு ஆகியவை மூலம் தனது சொத்துக்களை பெருக்கி உள்ளார்.. சொகுசு கார்கள் மீதான காதலுக்கு பெயர் பெற்றவர் ஷங்கர். அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி உள்ளிட்ட ஆடம்பர சொகுசு கார்களும் இருக்கின்றன.
இயக்குனராக சம்பாதிப்பதைத் தவிர, ஷங்கர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களில் பங்குகளை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது, இது அவரின் வருமானத்தை மேலும் வலுப்படுத்துகிறது. அவரின் முதலீடுகள் மற்றும் திரைப்படத் துறையில் நீண்டகால வெற்றி ஆகியவை அவரது மகத்தான செல்வத்திற்கு காரணமாக அமைந்துள்ளன. இதன் மூலம் ஷங்கர் இந்திய சினிமாவின் மிகவும் பணக்கார இயக்குனர்களில் ஒருவராக மாறி உள்ளார்..