வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதற்காக, மாநில அரசு ஒப்பந்ததாரர்கள் அதிக அளவில் பணம் கொண்டு செல்வதாக கிடைத்த தகவலையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள், தமிழகத்தில், அரசு ஒப்பந்ததாரர்கள் மூலம், 450 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டது.
நான்கு நாட்களாக நடத்திய சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம் மற்றும் அதற்கு இணையான மதிப்புள்ள நகைகளையும் கைப்பற்றினர். வருமான வரித் துறை வட்டாரங்களின்படி, மாநில அரசு ஒப்பந்ததாரர்களுடன் தொடர்புடைய சுமார் 50 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது, 450 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தேர்தல் பிரசாரங்களுக்கு சட்டவிரோதமாக பணம் பட்டுவாடா செய்தல் மற்றும் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்கான பணப் பரிமாற்றம் குறித்த தகவலின் அடிப்படையில் சென்னை, கோவை, திருப்பூர், வேலூர், தேனி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனை தொடங்கியது. சென்னையில் அடையாறு, திருவான்மியூர், அபிராமபுரம், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பல இடங்களில் திங்கள்கிழமை காலை வரை சோதனை நடந்தது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் திருநெல்வேலி செல்லும் விரைவு ரயிலில் பயணித்த மூவரிடமிருந்து பாஜக தலைவரும் திருநெல்வேலி வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.3.9 கோடி ரொக்கத்தை மாநில பறக்கும் படையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.