எகனாமிக் டைம்ஸ் செய்தியின் படி, ஜியோமி இந்தியா நிறுவனமானது கடந்த இரண்டு நிதி காலாண்டுகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு மொபைல் சந்தையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டுவரவும் ஊழியர்களை மறுசீரமைக்கவும் இந்த பணி நீக்க நடவடிக்கையை அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் மட்டும் Xiaomi இந்தியா நிறுவனத்தில் 30 பணியாளர்கள் தங்களுடைய வேலையை இழந்தனர். கூடிய விரைவில் மேலும் அதிகமானோர் பணியை இழக்க நேரிடலாம் என்று கூறப்படுகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் 1400 முதல்1500 பணியாளர்கள் இருந்த நிலையில், தற்போது ஆயிரத்துக்கும் கீழாக குறைத்து மறுசீரமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
பணி நீக்கம் குறித்து பேசியிருக்கும் ஜியோமி செய்தித் தொடர்பாளர், இந்த பணி நீக்க நடவடிக்கை என்பது முற்றிலும் வணிகம் சார்ந்தது. இதை விரைவாக செய்துமுடிக்க உள்ளூர் இந்தியத் தலைமைக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற நிறுவனத்தை போலவே சந்தையின் சரிவு மற்றும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த தகுதி நீக்க செயல்பாடு என்பது உடனடியாக நடைபெறாது என்று தெரிவித்துள்ள அவர், செயல்திறன் அடிப்படையில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத ஊழியர்களை அடையாளம் காணுவதில் தலைமைக்குழு அழுத்தத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். பணி நீக்கம் நடைபெற்றாலும் அது ஊழியர்கள் வேலை செயல்திறன் அடிப்படையில் மட்டுமே இருக்கும். இந்த இக்கட்டான நிலையில் பல பணியாளர்கள் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் மேலும் குறைந்துவிடும் என்ற கவலையையும் எழுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.