ஆள் கடத்தல் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்வதற்கு மாவட்ட எஸ்.பி.யினுடைய அனுமதி தேவையில்லை என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
தென்காசியில் திருமணமான புது பெண்ணை கடத்தி, அவரது கணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையில் முறையான புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில், இது தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்; தென்காசி கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி.யினுடைய அலட்சியமான மற்றும் இரக்கமற்ற மனநிலை காவல் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற பதற்றமான வழக்குகளில் மாவட்ட எஸ்.பி. எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
பதற்றமான மற்றும் மிக முக்கியமான சம்பவங்கள் நிகழும் பொழுது உடனடியாக அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கடத்தல் புகார்களில் வழக்குப்பதிவு செய்வதற்கு எஸ்.பி.யினுடைய அனுமதி தேவையில்லை. அதேபோன்று முக்கியமான குற்ற புகார்களில், வழக்குப்பதிவு செய்வதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி. தடையாக ஒருபோதும் இருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.