இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலும் நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மாவும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக யுஸ்வேந்திர சஹல் இருந்து வருகிறார். 20 ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என பாராட்டப்படும் இவர், பலமுறை இந்திய அணியின் வெற்றியில் பங்களித்துள்ளார். இவரும் பிரபல நடன இயக்குனரும் மாடலுமான தனஸ்ரீ வர்மாவை 2020 டிசம்பரில் திருமணம் செய்துகொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவின.
இந்த நிலையில், பரஸ்பர விவாகரத்து கோரி யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா இருவரும் மும்பை பாந்த்ரா குடும்பநல நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 6 மாத காலஅவகாசம் அளித்து வழக்கை ஒத்திவைத்தது. ஆனால், ஐபிஎல் தொடரில் பங்கேற்கவிருப்பதால் காத்திருப்பு காலத்தை ரத்து செய்து, உடனடியாக விவாகரத்து அளிக்க வலியுறுத்தி இருவரும் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக, இருவரும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், நீதிபதி மாதவ் ஜம்தார் தலைமையிலான ஒரு நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காத்திருப்புக் காலத்தை ரத்து செய்து, நாளைக்குள்(மார்ச் 20) விவகாரத்து வழக்கில் முடிவை அறிவிக்க குடும்ப நல நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் நடன இயக்குனர்-நடிகை தனஸ்ரீ வர்மா ஆகியோருக்கு பரஸ்பர ஒப்புதலின் பேரில் மும்பையில் உள்ள குடும்ப நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. முன்னதாக சாஹலிடமிருந்து ஜீவனாம்ச தொகையாக ரூ. 60 கோடி பணத்தை தனஸ்ரீ வர்மா கேட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவின. இதுகுறித்து தனஸ்ரீயை பலரும் இணையத்தில் விமர்சித்திருந்தார்கள். இருப்பினும் இந்த தகவல்களை தனஸ்ரீயின் குடும்பத்தினர் மறுத்திறுந்தனர்.