10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த மாணவி திவ்யலட்சுமி அதிக மதிப்பெண் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், தேர்வு முடிவுகளை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த தேர்வில் மாணவிகளில் 95.88% பேரும், மாணவர்களில் 91.74% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் 10ஆம் வகுப்பு மாணவர்களின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.80 ஆக உள்ளது. அதேபோல, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த மாணவி திவ்யலட்சுமி 500/499 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளார். தனியார் பள்ளி மாணவியான இவர், தமிழில் மட்டும் 99 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 4 பாடங்களில் 100/100 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார். இந்நிலையில், மாணவி திவ்யலட்சுமிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.