மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, அக நிவாரணப்படி உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டிற்கான 2ஆம் கட்ட அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்புக்காக ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நவராத்திரி, தீபாவளி என பண்டிகை காலம் நெருங்கி வருவதால் மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த முறை 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது 4 சதவீத உயர்வு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டதைப் போலவே, இந்த முறையும் 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி 46 சதவிகிதமாக உயர்த்தப்பட உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான 2023ஆம் ஆண்டின் இரண்டாவது டிஏ உயர்வு, எப்போது அறிவிக்கப்பட்டாலும், அது ஜூலை 1, 2023 முதல் 7வது ஊதியக் குழு விதிகளின் கீழ் அமலுக்கு வரும்.