புதுச்சேரி அரசில் பணிபுரியும் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.7 ஆயிரம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக போனஸ் கணக்கிடும் உச்சவரம்பை ரூ.7 ஆயிரமாக நிர்ணயித்து நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் கிடைக்கும். மத்திய அரசின் ஊதிய முறையைப் பின்பற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச ஊழியர்களுக்கும் இந்த உத்தரவுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இதன்படி, புதுச்சேரி அரசில் பணிபுரியும் குரூப் பிமற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.7 ஆயிரம் கிடைக்கும். மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி, புதுச்சேரி அரசின்நிதித் துறை சார்பு செயலர் சிவக்குமார் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் நகல், அனைத்து துறைச் செயலர்கள், துறைத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசு அகவிலைப்படி
மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு தவணை அகவிலைப்படி உயர்வும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அடிப்படைச் சம்பளம், ஒய்வூதியத்தின் 50%-ஐவிட மூன்று சதவீத (3%) உயர்வாக இருக்கும். 01.07.2024 தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
மேலும் விலைவாசி உயர்வை ஈடுகட்டும் விதமாக, ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப, 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்த உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9,448.35 கோடி செலவு ஏற்படும்.இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவர்.